கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் எதிரொலி: வேலூர் மாவட்டத்தில் சாராயம் விற்ற பெண்கள் உட்பட 50 பேர் கைது : 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

வேலூர், ஜூன் 21: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் எதிரொலியாக, வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 38 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விஷ சாராய விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் எதிரொலியாக மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர்.

கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய நபர்களை கண்காணித்து வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக சந்தேகப்படும் இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று 65 வழக்குகள் பதிவு செய்து பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2,400 கள்ளச்சாராய ஊறல், 667 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 431 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் எதிரொலி: வேலூர் மாவட்டத்தில் சாராயம் விற்ற பெண்கள் உட்பட 50 பேர் கைது : 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: