இடி, மின்னலுடன் மழை சூறைக்காற்றுக்கு மேற்கூரை பறந்து 2 வீடுகள் சேதம்

கடத்தூர், ஏப்.30: கடத்தூர் அருகே நேற்று இரவு இடி,மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சூறைக்காற்று வீசியதில் இரண்டு வீடுகளின் சிமெண்ட் 7 ஷீட்டுகள் காற்றில் பறந்து சேதமடைந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்தூர் அருகே உள்ள வெங்கடதாரஅள்ளி புதூரை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம். இவரது மகன்கள் ரகுகுமார், பாலமுருகன் ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் சிமெண்ட் ஷீட்டுகளால் வேயப்பட்ட வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் வெங்கடதாரஅள்ளி புதூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சூறைக்காற்று வீசியதில் ரகுகுமார், பாலமுருகன் ஆகியோரது வீடுகளின் சிமெண்ட் ஷீட்டாலான மேற்கூரை மற்றும் அதன் மீது கட்டப்பட்டிருந்த சுவர்கள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு சுக்கு நூறாக உடைந்தது. மேற்கூரை தூக்கி வெளியே வீசிய போது, வீட்டினுள்ள இருந்தவர்கள் அலறினர். மேற்கூரையின் துண்டுகள் விழுந்ததில், அவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

Related Stories: