அரூரில் இருந்து தர்மபுரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் கோரிக்கை

அரூர், ஏப்.24:  அரூரில் இருந்து தர்மபுரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் பகுதியிலிருந்து தர்மபுரிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணி நிமித்தம் செல்வோர், மருத்துவமனை செல்வோர் என நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து தர்மபுரிக்கு 9 அரசு பஸ்கள் மற்றும் 6 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பஸ்களில் எப்போதும் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனிடையே, கடந்த 17ம் தேதி முதல் அரசு பஸ்களை வேறு வழித்தடத்திற்கு மாற்றி விட்டு, டவுன் பஸ்கள் தர்மபுரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. அரூர் பகுதியில் இயக்கப்பட்டு வந்த 4ஏ, 16, 26, 15, 4, 10பி ஆகிய டவுன் பஸ்கள் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு மாற்றாக அந்த கிராம பகுதிகளுக்கு வேறு பஸ்கள் இயக்கப்படவில்லை.  இதனால் மருதிப்பட்டி, மொரப்பூர், மஞ்சவாடி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் டவுன் பஸ் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க, அரூரிலிருந்து தர்மபுரிக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: