கோவை அரசு கலைக்கல்லூரியில் 1,600 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்தனர்

கோவை, ஏப். 24: கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1,600 மாணவர்கள் நேற்று சமர்ப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பங்கள் பெற கூடுதல் கவுன்டர் அமைக்க மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணிதம், பி.காம் உள்பட 22 பாடப்பிரிவுகள் உள்ளது. 2019-20 கல்வியாண்டில் மொத்தம் 1,409 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 4ம் தேதி துவங்கியது. வரும் மே 6ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ் காண்பித்து விண்ணப்பங்களை இலசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில், நேற்று முதல் மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலைக்கல்லூரியில் குவிந்தனர். பலர் கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து 2 கவுன்டர்கள் விண்ணப்பங்கள் பெற அமைக்கப்பட்டது. மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, மொத்தம் 1,600 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பல மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனது. மேலும், மதிய இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் விண்ணப்பங்கள் மாணவர்களிடம் பெறவில்லை. இதனால், கல்லூரி வளாகத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விண்ணப்பங்கள் பெற கூடுதல் கவுன்டர்களை அமைக்க வேண்டும். மாணவிகளுக்கு தனி கவுன்டர் அமைத்து விண்ணப்பங்கள் பெற வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘மாணவர்களுக்கு விண்ணப்பம் வினியோகிக்க தனி கவுன்டர், பூர்த்தி செய்த விண்ணப்பம் பெற தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 7,800 விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 1,600 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். வரும் மே 6ம் தேதி வரை மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கல்லூரியிலும், பதிவு தபால் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தான் தரவரிசை வெளியிடப்படும். விண்ணப்பம் அளிப்பதில் முன்னுரிமை வழங்கப்படாது. எனவே, மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்” என்றனர்.

Related Stories: