குப்பை, கூளமாக மாறிய நரசய்யர் குளம்

தர்மபுரி, ஏப்.23: தர்மபுரி நகராட்சிக்கு சொந்தமான நரசய்யர் குளத்தில் குப்பை நிரம்பி வழிகிறது. இதை அகற்றி மழை நீரை சேமிக்கும் வகையில் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நரசய்யர் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும், சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். தொடக்கத்தில் குடிசை வீடுகளாக இருந்தவை, நாளடைவில் அடுக்குமாடி வீடுகளாகவும், வணிக நிறுவனங்களாகவும் மாறின. இந்நிலையில், தர்மபுரி நகராட்சி சார்பில், சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, நரசய்யர் குளம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த குளம் தற்போது குப்பை, கூளமாக காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அன்னசாகரம் ஏரியில் இருந்து மழை நீர், நரசய்யர் குளத்திற்கு வந்து நிரம்பும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த குளம் எப்போதும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பால் குளம் இருக்கும் இடமே பலருக்கு தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது நகராட்சி நிர்வாகம், குளத்தினை ஒட்டிய கந்தசாமி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல், இந்த குளத்தையும் தூர்வாரி மழைநீர் சேமிப்பு தொட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: