மரக்கடைகளில் விற்பனைக்கு குவிந்த தென்னை மரங்கள்

தர்மபுரி, ஏப்.11: கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயலால் சாய்ந்து முறிந்த விழுந்த தென்னை மரங்கள், தர்மபுரி மரக்கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளது. மரக்கடைகளில் தேக்கு, ரோஸ்வுட், பனை, கோங்கு, மா, பலா, வேம்பு போன்ற மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மரங்களின் தன்மைக்கேற்ப அவை பெஞ்ச், சேர், ஷோபா, டேபிள், அலமாரிகள் போன்றவை செய்யப்படுகிறது. பனை மரங்கள் ஓட்டு வீடுகளில் உத்திரமாக பயன்படுத்தப்படுகிறது. தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் கதவு நிலை, ஜன்னல் போன்றவை செய்ய பயன்படுகிறது. மா, பலா, வேம்பு போன்ற மரங்கள் நாற்காலி, ஷோபா போன்றவை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் கஜா புயலால், பல லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதில் பெரும்பாலும் தென்னை மரங்களே அதிகம்.

 இந்நிலையில், கீழே சாய்ந்த தென்னை மரங்களை, விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தஞ்சாவூரில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் உள்ள மர அறுவை மில்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மர வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதமாக தர்மபுரிக்கு ஏராளமான தென்னை மரங்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த தென்னை மரங்கள் ரீப்பர் கட்டைகளாக்கி பல்வேறு உபயோகங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: