கர்ப்பிணி பெண்கள் மரணம் தொடர்பாக வல்லுனர்கள் குழு அமைத்து உண்மையான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்

தர்மபுரி, மார்ச் 28: தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநில செயலாளர் வளர்மதி, நேற்று தர்மபுரி மருத்துவமனையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: தர்மபுரி கிருஷ்ணகிரி, ஓசூர் மருத்துவமனைகளில் சமீபத்தில் 7 கர்ப்பிணிகள் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு முன்பே, கடந்த சில நாட்களாக மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகின்றன. இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட, 8 லட்சம் ரத்த யூனிட்டுகள் நோயாளிகளுக்கு சரியான முறையில் பராமரிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவக்கூற்றின்படி ரத்தம் செலுத்திய பிறகு சாதாரண விளைவுகள் 1 சதவீதமும், தீவிர பின்விளைவுகள் என்பது 0.1 சதவீதம் என்பதும் உலகளவில் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அனைத்து ரத்த வங்கிகளும், டான்சாக்ஸ் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ரத்தம் செலுத்தப்பட்ட பின்னர், 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சமூக ஆர்வலர்களும் சிலரும் மேலோட்டமான அடிப்படையில் செய்திகள் வெளியாகின்றன. எனவே, முழுமையான விசாரணை நடத்தி உண்மையான காரணங்களை அறிந்த பின்பு டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களது சங்கம் துணை நிற்கும். தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே, ஒரு நாளைக்கு 1800 பிரசவங்கள் நடக்கின்றன. ஆயிரம் உயர் அறுவை சிகிச்சைகள், 2 ஆயிரம் விபத்து சிகிச்சைகள் தினமும் நடக்கின்றன. இந்த சிகிச்சைகளுக்கு பெரும்பாலும் ரத்தம் செலுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்.

 கர்ப்பிணி பெண் மரணத்திற்கு பல்வேறு காரணம் இருக்கையில், அனைத்தையும் ரத்தம் ஏற்றுவதனால் ஏற்பட்டது என கூறுவது, மக்களிடையே தவறான புரிதலை கொண்டு சேர்க்கும். ஏழை மக்கள் அரசு மருத்துவமனையை அணுகும் போது, அவர்களிடையே பயத்தை ஏற்படுத்தும். இதனால், அவசர காலங்களில் நோயாளிகளுக்கு அவசியமாக ரத்தம் செலுத்துவது போன்றவற்றில் தேவையற்ற அதிகபட்ச பயத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தும். ரத்தம் தேவைப்படும் இன்றியமையாத இடங்களில் கூட மறுக்கப்பட்டு தாமதம் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட காரணமாக அமைந்து விடும். எனவே, இது தொடர்பாக ரத்த வங்கி வல்லுனர்கள் குழு அமைத்து, கர்ப்பிணி பெண்கள் மரணம் உண்மையிலேயே ரத்தம் செலுத்தப்பட்டதா என்று அறிந்து உண்மையான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தேவையற்ற பீதிக்கும், பயத்திற்கும் ஆளாக வேண்டாம். இவ்வாறு கூறினார்.

Related Stories: