பாலக்கோட்டில் வாகன சோதனையில் ₹87 ஆயிரம் பறிமுதல்

தர்மபுரி, மார்ச் 22: பாலக்கோட்டில், பெருந்துறையை சேர்ந்தவரிடம் ₹87 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மற்றும் நிலைக்குழுவினர் தீவிர வாகன  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பல்வேறு இடங்களில் பொருட்கள், பணம்  பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  மகேந்திரமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட சர்க்கார் என்ற இடத்தில்  பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் சக்திவேல் தலைமையில் பறக்கும் படையினர்,  நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது  அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், பெருந்துறையை சேர்ந்த பூபாலகிருஷ்ணன், என்பவர் உரிய ஆவணமின்றி ₹87,270ஐ எடுத்து  வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அனைத்து பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிக்கும் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சார் நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்படும் என்றனர்.    

Related Stories: