ஊர்வலம் நடத்த திட்டமிட்ட தேதியை மாற்றக்கூடாது

தர்மபுரி, மார்ச் 20: ஊர்வலம் நடத்த திட்டமிட்ட தேதியை மாற்றக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தலும் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்துக்கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இன்று திமுக, அதிமுக மற்றும் பாமக வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சிகள் உரிய அனுமதி பெற்ற பின்னரே ஊர்வலங்களை நடத்த வேண்டும். அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் நடத்தவுள்ள ஊர்வலம் நாள் நேரம் ஆகியவை ஏற்கனவே நிர்ணயித்த திட்டத்திலிருந்து மாற்றக்கூடாது. போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக ஊர்வலம் நடத்துபவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் ஊர்வலம் செல்லும் பாதையை அமைத்து தொகுதி தொகுதியாக பிரித்து அனுப்ப வேண்டும். பல அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஒரே தேதி, நேரம் பாதையில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தால் பிரச்னை வரமால் இருக்க உள்ளூர் போலீசாரை அணுகி அவர்களின் உதவியுடன் இடைஞ்சல் இன்றி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஊர்வலங்கள் நடத்துவது குறித்து நாள், நேரம், பகுதி ஆகியவற்றை போலீசாரிடம் தெரிவித்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

ஒலிபெருக்கிகளை காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் பயன்படுத்தக்கூடாது. ஊர்வலங்களின்போது தகாத செயல்கள் நிகழாமல் இருக்கும்பொருட்டு ஊர்வலக்காரர்கள் தங்களுடன் எந்த பொருட்களையும் எடுத்துச்செல்லக்கூடாது. ஊர்வலத்தில் தொண்டர்கள் அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை ஏந்திச் செல்வதையோ அல்லது அதனை வைப்பதையோ அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு இரவு 10 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், அப்பகுதியின் உள்ளுர் சட்ட நெறிமுறைகள் தட்பவெப்பநிலை, திருவிழாக் காலங்கள், பள்ளித்தேர்வுகள் முதலிய விபரங்களின் அடிப்படையில் கூட்டங்கள், ஊர்வலங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். கூட்டங்களின் போது இடைஞ்சல் செய்யும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரின் உதவியைப் பெற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: