59 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்

கோவை, மார்ச் 14:

 கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை, பிளாஸ்டிக் கப், பை மற்றும் காலவதியான பழங்கள், உணவு பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.  இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி மாவட்டம் முழுவதும் உணவு தரம், தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தொடர்பாக ஆய்வு செய்ய உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, கோவை மாநகராட்சி பகுதி, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், சூலூர் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். டீ கடை, பழக்கடை, கம்பங்கூழ், மோர் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர்.
Advertising
Advertising

இந்த ஆய்வின் போது, தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 10 கிலோ 150கிராம், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 17.4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், செயற்கை சாயம் கலந்த டீத்தூள் 7.3 கிலோ, அழுகிய பழங்கள் 14 கிலோ, காலாவதியான உணவு பொருட்கள் 6 கிலோ, காலாவதியான குளிர்பானம் 5.5 கிலோ என மொத்தம் 59.35 கிலோ அளவிலான உணவு பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். இது தொடர்பாக 23 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர். இது போன்ற திடீர் ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் எனவும், தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய கூடாது எனவும் கடைகாரர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: