சாதனைக்கு மனம் மிக அவசியம்

திண்டுக்கல், பிப். 28: திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் வானத்தை தொட்டு விடலாம் வா என்ற தலைப்பில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது.அகில உலக லயன்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர் விவேக் வரவேற்றார். முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசியதாவது, ‘தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஓர் ஆளுமை. சிந்தனை, முயற்சி, பயிற்சி என தொடர்ச்சியாக வளர்க்க வேண்டிய பண்பு. தன்னிலை அறிந்து தான் என்னவாக ஆக வேண்டும் என்ற நிலைக்கு உயர தன்னம்பிக்கை அவசியம்’ என்றார்.

பெங்களூரூ கிரீன் சிட்டி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஷ் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது, ‘சாதனைக்கு மனம் மிக அவசியம். தினமும் மனதில் அவற்றை நினைக்கும் போது வெற்றி நிச்சயம். மனதை ஒருமுகப்படுத்தி எண்ணத்தை உயர்த்த வேண்டும். உயர்ந்த எண்ணங்களை விடாது பாதுகாக்க வேண்டும். வெற்றிக்கு ஆக்கம், ஆழம், ஆற்றல், அறிவு, அளவு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவைகள் அவசியம். இதனை நன்கு உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கை வசமாகும்’ என்றார். லயன் பிரேமா செல்லப்பாண்டி வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை ஆடிட்டர் ரவீந்திரன், லயன் பாண்டியன், நிர்வாக அலுவலர் திருப்பதி, ஜெகதீசன், ராஜேஷ் செய்திருந்தனர். துறைத் தலைவர் ரகுநாத் நன்றி கூறினார்.

Related Stories: