ஒன்றிய அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பழநி, ஜூலை 13: பழநியில் ஒன்றிய அரசைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கு 7 கிலோ அரிசி மட்டுமே என்ற புதிய உணவு பாதுகாப்பு சட்டத்திருத்த முன்மொழிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அந்தியோதயா அன்ன யோஜன திட்டம் மூலம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏஏஒய் ரேஷன் அட்டை வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களின் கூடுதல் ஊட்டச்சத்து தேவைகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகளின் எண்ணிக்கைக்கான உச்சவரம்பை நீக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பழநி பேருந்து நிலைய ரவுண்டானா முன்பாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, நகர பொருளாளர் அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: