திண்டுக்கல், ஜூலை 14: திண்டுக்கல் அருகே அடிதடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை ஒரு ஆண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சி கல்நூத்தாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவர் கடந்த 2022ம் ஆண்டு அடிதடி வழக்கில் திண்டுக்கல் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமினில் வெளியே வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து அவருக்கு திண்டுக்கல் முதலாவது ஜுடிஷியல் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து புறநகர் டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய போலீசார் மணிகண்டனை தேடி வந்த நிலையில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
