பேனரில் திருமாவளவன் படம் கிழிப்பு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி அருகே விடுதலை சிறுத்தை ேபனர் கிழித்ததை கண்டித்து, பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே மாதேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். கடந்த 12ம் தேதி மாதையனின் இல்லத்திருமண விழா நடந்தது. இதையொட்டி பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் படம் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பேனரில் இருந்த திருமாவளவனின் படம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேசமடைந்த மாதேமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், வி.சி கட்சியினர் என 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தர்மபுரி-மிட்டாரெட்டிஅள்ளி சாலையில் திரண்டனர். இதையடுத்து அவ்வழியாக மிட்டாரெட்டிஅள்ளியில் இருந்து தர்மபுரிக்கு வந்த பஸ்சை சிறைபிடித்து மாதேமங்கலம் பேருந்து நிறுத்தம் முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து, வி.சி கட்சியை சேர்ந்த அம்பேத்வளவன் என்பவர் கூறுகையில், மாதேமங்கலம் வன்னியர் தெரு அருகே வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த திருமாவளவனின் படம் கிழிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 2பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மறியலில் ஈடுபட்டோம். மறியலுக்கு பின்னர் 2பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர் என்றார்.

Related Stories: