திமுக பிரமுகரை தாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார்

தர்மபுரி, ஜன.18:அதியமான்கோட்டையில், ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு நடந்த போட்டி முடிவில் பரிசளிப்பு விழாவின் போது, பாட்டு பாடி நடனமாடியதில் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, எருதாட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று, எருதாட்டம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், திடீரென மைக்கை பிடித்து பாட்டு பாடி நடனமாட முயன்றார். அப்போது, அங்கிருந்த அதியமான்கோட்டை போலீசார், ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என கூறி, அவரை எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக கிளை செயலாளர் சண்முகம் எதிரே வந்தார். அவரை பார்த்த ராஜ்குமார், உன்னால் தான் இது போல் நடந்தது என கூறி, அவரை ஆவேசமாக தாக்கினார்.

இது குறித்து மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏவுக்கு சண்முகம் தகவல் அளித்தார். இதன் பேரில் விரைந்து வந்த எம்எல்ஏ, அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், ராஜ்குமார் மீது ஏற்கனவே மது பானங்களை பதுக்கி விற்றதாக வழக்கு உள்ளது. தற்போது திமுக பிரமுகரையும் தாக்கியுள்ளதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் திமுக சார்பில் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார். இதுகுறித்து விசாரிப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

Related Stories: