பசுமை தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம்

தர்மபுரி, டிச.11: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி, பசுமை தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடந்தது. முன்னாள் எம்பி செந்தில் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஐநாசபை மனித உரிமை பேரவை 40வது கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் நீதிக்காக இலங்கையில் வசித்த தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரிக்கவும், ஆவணப்படுத்தவும், சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போல் சர்வதேச பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மூலம் இலங்கை அரசு ஒப்புக்கொண்டபடி நிலைமாற்ற நீதியை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும். உலகளாவிய நீதி அதிகாரத்தின் கீழ் இலங்கையின் குற்றவாளிகளை உலக நாடுகள் தண்டிக்க வேண்டும். இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்லது சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த கோரி ஐநா பொதுசபைக்கும், ஐநா பாதுகாப்பு சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமைதாயகம் மாநில துணை செயலாளர் மாது, முன்னாள் எம்பி பாரிமோகன், மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாநில நிர்வாகி நம்பிராஜன், பாமக மாவட்ட தலைவர் மதியழகன், பசுமை தாயகம் மாவட்ட தலைவர் வீரமணி, மாவட்ட செயலாளர்கள் ராஜா, வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: