ஆக்கிரமிப்புகளை அகற்றி சனத்குமார நதி கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி, டிச.7: தர்மபுரி சனத்குமார நதியின் கால்வாயில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, தூர்வார ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சனத்குமார நதியின் கால்வாய், வத்தல்மலை அடிவாரம் மற்றும் பதிகால்பள்ளம் வனப்பகுதி நீர்பிடிப்பு பகுதியாக இருந்தது. மலை அடிவாரத்தில் இருந்து பெரியஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் ஏரி, ஏமகுட்டியூர் வழியாக இலக்கியம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அன்னசாகரம் வழியாக கம்பைநல்லூர் சென்று இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் இந்த கால்வாய் செல்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நதியின் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைத்ததோடு, நிலத்தடி நீரும் உயர்ந்ததால், விவசாய பணிகள் நன்கு நடந்து வந்தது.

நாளடைவில், நதியின் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து சாக்கடை கழிவுநீர் ஓடும் பகுதியாக கால்வாய் மாறி விட்டது. பல இடங்களில் கால்வாய் பகுதியில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. ஒருசில இடங்களில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சரிவர தூர்வாரப்படாததால், தற்போது கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு புதர் மண்டி காணப்படுகிறது. பாரதிபுரம், அன்னசாகரம், குப்பாண்டி தெரு, காமாட்சியம்மன் தெரு, மதிகோன்பாளையம் வரை கால்வாய் இருந்த இடமே தெரியாத அளவிற்கு செடிகள் வளர்ந்துள்ளது. எனவே, அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, இந்த கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: