போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக போடப்பட்டதால் வத்தல்மலை தார்சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள்

தர்மபுரி, நவ.30: தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் போடப்பட்ட தார்சாலை போக்குரத்திற்கு ஏற்றாற்போல் சீரமைக்க அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொமத்தம்பட்டியில் இருந்து வத்தல்மலை வரை 18 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்சாலை தரமின்றியும், சில வளைவுகளில் சரிவாக அமைக்கப் பட்டிருந்தது. இதனால் டூவீலர்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை இருந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்தது. சாலை அமைத்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நீடித்தது.

இந்நிலையில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வத்தல்மலை நாய்க்கனூரில் இருந்து தர்மபுரி பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என வத்தல்மலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் கடந்த 24ம் தேதி மாலை தர்மபுரி சார் ஆட்சியர் சிவனருள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் வத்தல்மலையில் உள்ள பல வளைவு இடங்களில் மினி பஸ் செல்ல லாயக்கற்றது. இதனால் நெடுஞ்சாலைதுறை ஊரக வளர்ச்சிதுறை, போக்குவரத்து துறை, அரசு போக்குவரத்து கழகம், வனத்துறை, வருவாய்துறை அதிகாரிகளுடன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆய்வு செய்து வத்தல் மலைக்கு மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வத்தல்மலையில் அமைக்கப்பட்ட தார்சாலையை தாசில்தார் மாரிமுத்து தலைமயில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டபொறியாளர் குலோத்துங்கன், வனத்துறையினர், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், சாலைகளின் தன்மை, வளைவு பகுதி, கிராம சாலைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Related Stories: