பென்னாகரம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தீ விபத்து

தர்மபுரி, அக்.23: தர்மபுரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய ேநரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தர்மபுரி- பென்னாகரம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். மேலும் நகை, பத்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5மணியளவில், மின் நிறுத்தம் ஏற்பட்டது.

இதையடுத்து வங்கியில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டது அப்போது ஜெனரேட்டரில் இருந்து புகை வந்தது.

சிறிது ேநரத்தில் ஜெனரேட்டரில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதையடுத்து வங்கி பணியாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். தீ கட்டுக்குள் வராததால், தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். சரியான ேநரத்தில் தீயை அணைத்ததால், வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பணம், நகை தப்பியது. மேலும் இருபுறங்களில் இருக்கும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.  இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: