இண்டூரில் பொது வழித்தடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு

தர்மபுரி, அக்.16: தர்மபுரி அருகே, பொது வழித்தடத்தடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள்  புகார் மனு கொடுத்தனர். நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் ஊர்பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘இண்டூர் பகுதியில் 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகிறோம். இப்பகுதியில் முஸ்லிம் தெரு, முதலியார் தெரு, குயவர்தெரு மற்றும் 18 ஊர் கிராம பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தை பேட்டை ஆகிய முக்கிய தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களை இணைக்கும் பொது வழிபாதையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். பொதுவழித்தடமாக உள்ளதால், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இண்டூர் பள்ளப்பட்டி பெரியண்ணன் மகன் சாந்தமூர்த்தி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், ‘இண்டூர் பகுதியில் எனது வீட்டின் முன்புற சாலையை பொதுமக்கள் வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். அது பொதுவழித்தடம் தான். அந்த வழித்தடத்தை நான் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அந்த வழித்தடத்தில் எனது சொந்த செலவில், ஹாலோ பிளாக் கல் பதிக்க அனுமதிக்க கேட்டுள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் கல் பதிக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: