அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில்வறட்சி, நோய் தாக்குதலால் காய்ந்து வரும் கரும்புகள்

அரூர், ஆக.13: வறட்சி மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கரும்புகள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதிகளில் நடவு செய்யப்படும் கரும்புகளை, கோபாலபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, விவசாயிகள் பதிவு செய்து அரவைக்கு அனுப்பி வருகின்றனர். வறட்சி மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக, நடப்பாண்டு, நடவு செய்யப்பட்டுள்ள கரும்புகள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ராஜசேகர் கூறியதாவது: நடப்பாண்டு சுப்பிமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, 6,500 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கரும்பை பதிவு செய்துள்ளனர். போதிய மழையின்மை மற்றும் பூச்சி நோய்த் தாக்குதல் காரணமாக, 1,500 ஏக்கர் கரும்புகள் காய்ந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கடன் பெற்றுள்ள விவசாயிகளிடம் இருந்து, கரும்புக்கு காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வறட்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: