கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகள் மீட்பு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் இந்த வனப்பகுதியில் இருந்த 2 கரடிகள் நேற்று மாலை வெளியேறி தண்ணீர் தேடி அலைந்துள்ளது. அப்போது வனப்பகுதி அருகே உள்ள சிங்காரம் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் 2 கரடிகளும் தவறி விழுந்துள்ளன. மீண்டும் மேலே வரமுடியாமல் தத்தளித்தன. இதைப்பார்த்த சிலர் வாணியம்பாடி வனச்சரக அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்றனர். கிணற்றில் இருந்த கரடிகளை கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், முடியவில்லை. பின்னர் கிணற்றில் இருந்து கரடி வெளியே வரும் வகையில் பாதை ஏற்படுத்தினர். இதையடுத்து சுமார் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் அமைத்த பாதை வழியே ஒரு கரடி வெளியே வந்து வனப்பகுதிக்குள் ஓடிசென்றுவிட்டது. ஆனால் மற்றொரு கரடி வெளியே வராததால் அதை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து போராடினர். இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் அந்த கரடியும் வெளியே வந்து காட்டுக்குள் ஓடிவிட்டது. சுமார் 7 மணி நேரம் போராடி கரடிகளை மீட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: