துப்பாக்கியால் சுட பயிற்சி பெற்ற நெல்லை வாலிபர் கைது: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நெல்லை: நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி பயிற்சி கொடுத்தவரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் அஜய் கோபி (22). இவர் பெங்களூரிலுள்ள ஒரு சட்டக்கல்லூரியில் தபால் மூலம் சட்டம் படிக்க சேர்ந்து முதலாம் ஆண்டோடு நிறுத்தி விட்டார். இவரது உறவினர் நெல்லை பாலபாக்கியா நகரைச் சேர்ந்த வெள்ளை சுந்தர் (36). இவர் மீது சென்னை உள்ளிட்ட பல்வேறுகாவல் நிலையங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. வெள்ளைசுந்தர், பிரகாஷ், ராஜ்சுந்தர் உள்ளிட்ட கும்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராமநாதபுரம் சமஸ்தான வாரிசாக கருதப்படும் கார்த்திக் சேதுபதியை சொத்து பிரச்னைக்காக மிரட்டி கடத்தியதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிந்து வெள்ளைசுந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 7 பேரை கைது செய்தனர், பின்னர் வெள்ளைசுந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில் வெள்ளைசுந்தர், தனது உறவினரான அஜய் கோபிக்கு கடந்த 2018ம் ஆண்டு நெல்லை டவுனில் அஜய்கோபி வீட்டில் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் துப்பாக்கியால் சுட பயிற்சி அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாளை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி அஜய் கோபியை கைது செய்தனர். மேலும் அவருக்கு துப்பாக்கி பயிற்சி அளித்தது தொடர்பாக வெள்ளைசுந்தர் மீது பாளை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இதனிடையே கைதான அஜய் கோபியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜய் கோபியின் நண்பர்கள் தர்சன் (22), சிவா (22) ஆகியோர் கஞ்சா விற்பனையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே வந்துள்ளனர். கடந்த வாரம் நெல்லை சந்திப்பு பாலத்தில் நடந்த சாலை விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். அவர்களும் இவர்களின் கூட்டாளிகள் ஆவர்.

விபத்தில் பலியான நண்பர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அஜய் கோபி மற்றும் அவரது நண்பர்களான தர்சன், சிவா ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அஜய் கோபி அளித்த புகாரின் பேரில் தர்சன், சிவா ஆகியோர் பாளை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் எண்ணத்தில் அஜய் கோபி, துப்பாக்கியால் சுட பயிற்சி பெறும் வீடியோவை அவர்களது நண்பர்களே சமூக வலைதளத்தில் பதிவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வெள்ளை சுந்தர் மற்றும் அஜய் கோபி இடையே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டு அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் பிரிந்து உள்ள நிலையில் முன்பு அஜய் கோபிக்கு துப்பாக்கியால் சுட வெள்ளை சுந்தர் பயிற்சி அளித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளைசுந்தரை கைது செய்வதற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: