வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது

நெல்லை: இரட்டை ரயில்பாதை பணிகள் காரணமாக இம்மாத இறுதியில் தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தற்போது இரட்டை ரயில்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இவ்வாண்டுக்குள் அப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் பணிகள் இரவும், பகலும் நடந்து வருகின்றன. இம்மாத இறுதியில் மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12661/12662) ரயில் வரும் 23ம் தேதி முதல் முதல் மார்ச் 3ம் தேதி வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். திண்டுக்கல், மதுரை மார்க்கத்தில் செல்லாது.

மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செல்லும் பொதிகை எக்ஸ்பிரசுக்கு எலக்ட்ரிக், டீசல் இன்ஜின் மாற்றம் விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெறும். சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 16101/16102) ரயில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது. பயணிகள் இதற்கு ஏற்றபடி பயணங்களை அமைத்துக் கொள்ள தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: