800க்கும் மேற்பட்ட சங்கங்களில் முறைகேடு ரூ.365 கோடி சொத்துகளை முடக்கியது கூட்டுறவுத்துறை: கூட்டுறவு வங்கிகளில் கூகுள்பே, பேடிஎம் வசதி

சென்னை: தமிழகத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட சங்கங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டறிந்து ரூ.365 கோடி சொத்துகளை முடக்கம் செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தவிர்த்த மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட 17 வகையாக கடன்கள் கூட்டுறவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக நடப்பாண்டில் 13.49 விவசாயிகளுக்கு ரூ.10,361.54 கோடி கடன் வழங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. குறிப்பாக 12 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதில் 9 மாதங்களிலேயே ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. அதேபோல், இதுவரை கூட்டுறவுத்துறையில் இல்லாத அளவில் கடந்த ஆண்டு 5.87 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதில் 2.80 லட்சம் நபர்களுக்கு ரூ.1,730.81 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், நடப்பாண்டில் 2.46 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,588.76 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கூட்டுறவுத் துறையில் முதல் முறையாக ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு, வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 2.15 விவசாயிகளுக்கு ரூ.977.99 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 5 சதவிகித வட்டியில் கடன் வழங்குவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டன.

அதில் இதுவரை ரூ.8.48 கோடி கடன் கூட்டுறவுத்துறை மூலமாக  வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நடப்பாண்டில் நகைக் கடன்கள் ரூ.5.01 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 13.12 லட்சம் குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன. தமிழக முழுவதும் உள்ள 10,776 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.49.42 கோடி கடன் நடப்பாண்டில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை உயரதிகாரி கூறியிருப்பதாவது: கூட்டுறவுத்துறையில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடன் ரூ.1029 கோடி வழங்கப்பட்டு முதன் முதலாக 10 ஆயிரம் கோடி கடன் வழங்கி சாதனை படைத்தோம். தற்போது இந்த நிதியாண்டு (2022-23) 9 மாதங்களிலேயே 13.49 லட்சம் விவசாயிகளுக்கு  ரூ.10,361 கோடி கடன் வழங்கி முந்தைய சாதனையை முறியடித்துள்ளோம். இந்த மிகப்பெரிய சாதனையை படைக்க உதவிய கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும், அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த நிதியாண்டு (2023-24) கூட்டுறவுத்துறையில் 15 ஆயிரம் கோடி வரை இலக்கு நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் பணபரிவர்த்தனை

கடந்தாண்டு செப்.27ம் தேதி மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறை வசதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் இம்மாதம் இறுதிக்குள் கூகுல்பே, பேடிஎம் போன்ற வசதிகளை விரிவுப்படுத்த திட்டம் உள்ளது.

கணினிமயமாக்கல்

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள், பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கணினிமயப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. அதேபோல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கம் மற்றும் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை இணைத்து கணினிமயமாக்கும் பணிகள் விரைவில் நிறைவடைகிறது. இதன்மூலம், கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

15.88 லட்சம்  உறுப்பினர்கள் பலன்

கூட்டுறவுத்துறையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,755 கோடியில் தள்ளுபடி வழங்கும்  நடவடிக்கைகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. இதன் மூலமாக 15.88 லட்சம் உறுப்பினர்கள் பலன் அடைய உள்ளனர்.

கூட்டுறவுத்துறைக்கு புதிய செயலி

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பொதுவான ஒரு மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Related Stories: