இந்தாண்டின் முதல் புயல் ரெமல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் பரவலாக மழை பெய்யும்: புயல் நகரும்போது தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: வங்கக்கடலில் இன்று காலை உருவாகும் இந்தாண்டின் முதல் புயல் ரெமல் நாளை நள்ளிரவு மேற்கு வங்காளம் கடற்கரை அருகே கரையை கடக்கும் என்றும், கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது.

கத்திரி தொடங்கிய பின்பு இன்னும் எந்த அளவுக்கு வெயில் கொடுமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில், கத்திரி வெயில் காலம் என்றாலும் வெயில் தாக்கம் படிப்படியாக குறைந்து தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதாவது, மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. ஆரம்பத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்த நிலையில், அதன் பிறகு பரவலாக மழை கொட்டத் தொடங்கியது.

அதிலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் என அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது கோடை வெப்பம் தணிந்துள்ளது.

இதற்கிடையே வடதமிழகம் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்காளம் பகுதியில் மையம் கொண்டுள்ள நிலையில், வடகிழக்கு திசையில் நகா்ந்து இன்று காலை புயலாக வலுப்பெறும். அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக இன்று இரவு வலுப்பெறும். இதை தொடர்ந்து நாளை நள்ளிரவு வங்கதேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு வங்காளம் கடற்கரை அருகே புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் வடக்குப் பகுதியை நோக்கி நகரும் போது தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதேநேரம், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும் 30ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் என தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலை 38 செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘புயல் காரணமாக மழை பொழிவு குறையும். எனவே இந்த மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் என சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

The post இந்தாண்டின் முதல் புயல் ரெமல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் பரவலாக மழை பெய்யும்: புயல் நகரும்போது தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: