திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பு தமிழக மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் ஆளுநர்: டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று அளித்த பேட்டி: திருவள்ளுவர் தினம் என்பதை தை முதல் நாளை ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வமாக கடைப்பிடித்து தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்த ஆளுநருக்கு தமிழ்நாட்டு பண்பாடும் தெரியாது. தமிழ்நாட்டு பழக்கம் வழக்கங்களும் தெரியாது.

திருவள்ளுவரையும் தெரியாது. இவர் ஏதோ திருவள்ளுவருக்கு ஜாதகம் குறித்தவரை போல, அவருக்கு அந்த நட்சத்திரத்தை எல்லாம் அழைப்பிதழில் சொல்லி திருவள்ளுவர் நாள் கொண்டாடுகிறோம் என்று அறிவித்து, திருவள்ளுவருக்கும் காவி உடை அணிந்துள்ளார். வேண்டும் என்றே திட்டமிட்டு, தொடர்ந்து பிரதமர் மோடி தொடங்கியதை, அமித்ஷா தொடர்ந்ததை, ஆளுநர் இன்றைக்கு தொடர்ந்து செய்து வருகிறார். திமுக இதை வன்மையாக கண்டிக்கிறது.

இவர் திருக்குறளில் மாபெரும் அறிஞர் என்ற நிலையிலே கடந்த முறை ஒரு கருத்தை சொன்னார். ஜியு போப் திருக்குறளை தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்று சொன்னார். இவர் திருக்குறளில் தேர்ச்சி பெற்று இருந்தால் தான் மொழிப்பெயர்ப்பிலே சரியா, தவறா என்று சொல்ல முடியும். இவருக்கு திருக்குறளிலே ஒரு குறள் கூட தெரியாத நிலையில், ஜியு போப், திருக்குறளை தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்று சொல்லும் அளவுக்கு தனது அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் ஆளுநர்.

அவரின் செயல்பாடுகளில் இருந்து, ஆளுநருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதை அவரே வெளிப்படுத்தி கொள்ளும் விதமாகவே அவர் நடந்து கொண்டு இருக்கிறார். அது போன்ற நிகழ்வாகதான் இதை பார்க்கிறேன். இருந்தாலும் இது தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற அவமானமாக நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பு தமிழக மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் ஆளுநர்: டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: