மக்களுக்கு எதையும் செய்யாமல் கடவுள் அவதாரம் என்கிறார்: மோடி மீது முத்தரசன் தாக்கு

கோபி: 10 ஆண்டு காலம் மக்களுக்கு எதையும் செய்யாத பிரதமர், தோல்வி பயத்தால் தன்னையே கடவுள் அவதாரம் என்ற பிரசாரத்தை செய்து வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். கோபியில் வருகிற 27ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா குறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சி தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியைகூட நிறைவேற்றவில்லை என்று நாங்கள் பகீங்கிரமாக குற்றம் சாட்டுகிறோம். விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய தொழில், உடைமைகள், உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. மோடி 10 ஆண்டு கால பிரதமராக இருந்த காலத்தில் நாட்டு மக்களுக்கு செய்த சாதனைகளை பற்றி எதுவுமே பேசாமல், அதற்கு மாறாக தமிழ்நாட்டில் பிரசாரத்திற்கு வந்தபோது நான் புத்துணர்ச்சி பெறுகிறேன் என்றார்.

தமிழையும், தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என்றும், வள்ளுவர், கப்பலோட்டிய தமிழன், பாரதியார், திருவள்ளுவரை பாராட்டி உள்ளார்.  தமிழ்நாட்டில் இவ்வாறான பிரசாரத்தை மேற்கொண்ட மோடி, வட மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு செல்லும்போது தமிழர்களை திருடர்கள் என்கிறார். வட மாநிலம், தென் மாநிலம் என்று பிரிவினை வாதம் பேசினாலும், எந்த வகையிலும் பயன் கிடைக்காத நிலையில் கடைசியாக அவர் பேசி உள்ளது நான் ஒரு கடவுளின் அவதாரம், என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களுக்கு எதையும் செய்யாமல் கடவுள் அவதாரம் என்கிறார்: மோடி மீது முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: