சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை விவகாரம் உரிய அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும்: கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான உரிய அனுமதியை கேரள அரசு பெற்றிருக்கவில்லை என்றால், அனுமதிகளைப் பெறும் வரை தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் வேளாண் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆற்றுப் படுகை விளங்குகிறது.

அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக திகழும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரள மாநிலம் சட்டமூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

இந்தநிலையில் இதுதொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு, சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை, தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும் அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்தவேண்டும். அணை கட்டுவதால் தமிழக அரசுக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

The post சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை விவகாரம் உரிய அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும்: கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: