நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம் சிபிசிஐடி எஸ்பி நேரில் விசாரணை

நெல்லை: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். நெல்லை மாவட்டம், திசையன்விளை கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60) என்பவர் கடந்த 4ம் தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் மரணத்துக்கு முன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் வைத்தும், சிசிடிவி காட்சிகள் வைத்தும் குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

ஆனால் துப்பு துலங்காததால் வழக்கு நேற்று முன்தினம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினமே சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கினர். ஜெயக்குமார் உடல் கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். விஏஓ ஜெயக்குமார், கிராம உதவியாளர் ராஜகோபாலிடம் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று 2ம் நாளாக சம்பவம் நடந்த இடம், தோட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள், ஜெயக்குமாரின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

வீட்டை சுற்றியுள்ள பகுதிகள், தோட்டத்தை சுற்றிலும் உள்ள பகுதிகள், சிசிடிவி கேமராக்கள், அதற்குறிய டிவிஆர் கருவிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் உவரி போலீசாரிடம் இருந்து முக்கிய தடங்களான 2ம் தேதி மாலை முதல் 4ம்தேதி வரையிலான சிசிடிவி காட்சி பதிவுகள், செல்போன் எண்களுக்குரிய கால்லிஸ்ட்கள் ஆகியவற்றை பெற்றுள்ளனர்.

இதற்கிடையே சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நேற்று மாலை 3.30 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அதன் பின்னர் கார் மூலம் நெல்லை வழியாக கரைசுத்துபுதூருக்கு சிபிசிஐடி அதிகாரிகளுடன் சென்ற அவர், ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட பகுதிகள், வீடு, கார் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் வழக்கு விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். 2வது நாளாக இன்றும் (25ம் தேதி) மீண்டும் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக எஸ்பி முத்தரசி விசாரணை நடத்துகிறார்.

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம் சிபிசிஐடி எஸ்பி நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: