குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த யூடியூபர் சங்கர் வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: மனுவை மூன்றாவது நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் பரிந்துரை

சென்னை: யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால் விசாரணையை 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க கோரி சங்கரின் தாய் கமலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்று உத்தரவாத மனு தாக்கல் செய்ய சங்கர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணை வந்தது. யூடியூபர் சங்கரின் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. யூடியூபர் சங்கரின் தாய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சங்கர் கருத்தால் எந்த சட்டம்- ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அனைத்து நடைமுறையும் பின்பற்றி தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யூடியூபர் சங்கர் பேச்சால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் தரப்பில் முறையிடப்பட்டது. வீரலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வாதிடும்போது, தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறு கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். நீதித்துறை ஊழியர்களை கேவலமாக பேசியுள்ளார். அவர் தண்டிக்கப்பட வேண்டிய நபர்.

நீதிமன்ற அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்த உத்தரவாதத்தை மீறி மீண்டும் அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை கேட்காமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இதை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சந்தியா ரவிசங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ், எனது கட்சிக்காரர் யூடியூபர் சங்கரால் பாதிக்கப்பட்டவர். அவரது முறையீட்டை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது.

இது தொடர்பாக மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இறுதி விசாரணை நடத்துவது தொடர்பாக தங்களுக்கிடையே (இரு நீதிபதிகளிடம்) மாறுபட்ட கருத்துகள் உள்ளது. இந்த மனு மீது பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து மதியம் 3.45 மணிக்கு நீதிமன்ற அறைக்கு வந்த இரு நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்புகளை வாசித்தனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தீர்ப்பில், ‘அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் பேசியதால் தான் அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன். குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவில் போதைப்பொருள் வழக்கு குறிப்பிடப்படவில்லை. 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்குகளில் ஜாமீன் பெறாத நிலையில் குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. சங்கரால் எந்த சட்டம்- ஒழுங்கு பிரச்னையும் இல்லை.

எனவே, மனதை செலுத்தாமல் சங்கர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.  நீதிபதி பி.பி.பாலாஜி தனது தீர்ப்பில், ‘யூடியூபர் சங்கரின் தாய் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்து அதன் பின்னர் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து யூடியூபர் சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டனர்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரைத்தனர். முன்னதாக கோவை சிறையில் யூடியூபர் சங்கர் தாக்கப்பட்டதாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர், மனுதாரர் கொடுத்த புகார் குறித்து நான்கு மாதத்தில் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

The post குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த யூடியூபர் சங்கர் வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: மனுவை மூன்றாவது நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: