கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் கஞ்சா விற்பனை செய்து கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்: எடப்பாடியுடன் இருக்கும் புகைப்படம் வைரல், அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பா?


சேலம்: சேலத்தில் கஞ்சா வழக்கில் கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியுடன் கைதான ரவுடி எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அடுத்த வீராணம் அல்லிக்குட்டை ஏரி பகுதியில், கடந்த இருதினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அம்மாபேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சாபீர் (32) என்பவர், இவர்களுக்கு மொத்தமாக, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில், பிரபல ரவுடியான சாபீர் மீது, ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் சாபீர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த ைபயில் கட்டுக்கட்டாக பழைய மதிப்பிழந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இருந்தன.

இதனால் அதிர்ச்சிடைந்த போலீசார், அதனை பறிமுதல் செய்தனர். பின்னர், சாபீரை கைது செய்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த சாபீர், கோகுலகிருஷ்ணன் மற்றும் சிலர் கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சேந்தமங்கலத்தை சேர்ந்த ஒருவர் சாபீர் மற்றும் கோகுலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, தன்னிடம் உள்ள ஒரு கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும் படி கேட்டுள்ளார். இதற்காக 20 சதவீத கமிஷன் தருவதாக கூறி, பணத்தை ஒப்படைத்தார். ஆனால், சாபீர் அதனை மாற்றித்தரவில்லை. இதனிடையே கொரோனா காரணமாக சேந்தமங்கலத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

அதேசமயம், பணத்தை மாற்றுவதற்கான செலவிற்கு என கோகுலகிருஷ்ணனிடம் ரூபாய் ஒரு லட்சத்தை சாபீர் பெற்றுள்ளார். பணத்தையும் மாற்றவில்லை, அதற்காக கொடுத்த ஒரு லட்சத்தையும் திருப்பித் தரவில்லை என கேட்டபோது, சாபீர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கோகுலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் சாபீர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சாபீர் அதிமுக பிரமுகர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் மாநகர அதிமுக மாணவர் அணியில் உள்ள அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் கஞ்சா விற்பனை செய்து கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்: எடப்பாடியுடன் இருக்கும் புகைப்படம் வைரல், அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பா? appeared first on Dinakaran.

Related Stories: