செய்யாறு அருகே அரியவகை நாகக்கன்னி புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு-விஜயநகர காலத்தை சேர்ந்தது

செய்யாறு :  செய்யாறு அருகே விஜயநகர காலத்தை சேர்ந்த அரியவகை நாகக்கன்னி புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வடஆளப்பிறந்தான் கிராமம் பிரதான சாலையொட்டி விநாயகர் கோயில் நிழற்கூடம் அருகே பழமை வாய்ந்த நாகக்கன்னி புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை.செல்வகுமார் கூறியுள்ளதாவது:கோயில்களில் ஆலமரம், வேப்ப மரம் மற்றும் குளக்கரை அரச மரம் ஆகியவற்றின் அடியில் நாகர்களின் உருவங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுவதால், பல வகையான தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது. நாகங்கள் புற்றுகளில் இருப்பதாக கருதி, அவற்றுக்குள் பாலூற்றி வழிபடுவது, விரதம் மேற்கொள்ளுவது போன்ற வழக்கம் கிராம, நகர்ப்புறங்களில் தற்போதும் இருந்து வருகிறது.

இந்நிலையில், செய்யாறு தாலுகா, வடஆளப்பிறந்தான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நாகக்கன்னி புடைப்பு சிற்பம் அரிய வகையானதாகவும், பழமையானதாகவும் உள்ளது. அதன் தொன்மை அடையாளம் கருதி விஜயநகர காலத்தை சேர்ந்தது என அறிய முடிகிறது. நாகக்கன்னி புடைப்பு சிற்பத்தின் உயரம் 77 செ.மீ, அகலம் 32 செ.மீ. ஆகும். சிற்பத்தில் இரு நாகங்கள் இணைந்து பின்னியபடி உள்ளது. முதல் சுருள் வட்டத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுபோல் உள்ளது. பாம்புகளின் பிணைப்புகளுக்கு இடையில் இரண்டாம் சுருள் வட்டத்தில் நந்தி வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் சுருள் வட்டத்தில் விநாயகர் இடது காலை சற்று நீட்டியபடியும், வலது காலை மடக்கியும் அமர்ந்த நிலையில் 4 கரங்களோடு காட்சியளிக்கின்றார். பாம்புகளின் வால் பகுதி கீழ்நோக்கி உள்ளது. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும், அதையடுத்து நந்தி, விநாயகர் ஒருங்கிணைந்திருப்பது அரிய வகையாக உள்ளது.

இந்த நாகக்கன்னி புடைப்பு சிற்பம் தோண்டி எடுக்கப்பட்டு, ஆல மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்த நிலையில், புதிதாக கோயில் எழுப்ப உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: