குமரியில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா 28ம் தேதி தொடக்கம்: ஜன.5ல் தேரோட்டம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா வரும் 28ம் தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா கொடியேற்றம் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 6ம் தேதி திருவிழா நிறைவடைகிறது. முன்னதாக 27ம்தேதி, மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அன்று மாலை கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோயிலில் இருந்து மரபுப்படி பட்டாரியர் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேளம், தாளம் முழங்க முத்துக்குடை ஏந்தி கொண்டு சென்று கோயில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நடக்கும் 10 நாட்களும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா காட்சிகள் நடக்கின்றன. 3ம் திருவிழா அன்று கோட்டார் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி, மருங்கூர் சுப்பிரமணியசுவாமி ஆகியோர் தனது தாய், தந்தையரான சிவன், பார்வதியை சந்திக்கும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மிகவும் விஷேசமாகும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 9ம் திருவிழாவான ஜனவரி 5ம் தேதி நடக்கிறது.

அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும். அன்று இரவு கோயிலில் சப்தாவர்ணமும் நடைபெறும். மக்கள்மார் சந்திப்புக்காக வந்த வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசாமி, மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆகியோர் பிரியாவிடை பெற்று செல்லும் நிகழ்ச்சியே சப்தாவர்ணம் ஆகும்.  மறுநாள் ஜனவரி 6ம்தேதி, ஆருத்ரா தரிசனத்துடன் திருவிழா நிறைவடைகிறது. 10 நாள் திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். திருவிழா நாட்களில் மூஷிக வாகனம், புஷ்பக விமான வாகனம், இந்திரவாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா காட்சிகள் நடக்கும். இதற்காக சுவாமி வீதி உலா வரும் வாகனங்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கோயில் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

*ஆஞ்சநேயர் ஜெயந்தி 23ம் தேதி கொண்டாட்டம்

சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயசுவாமி கோயிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ெஜயந்தி வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், களபம், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை, பழச்சாறு, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம், மாதுளை சாறு, தேன் உள்பட 16 வகையிலான அபிஷேகங்கள் நடக்கின்றன. பக்தர்களுக்கு லட்டும் வழங்கப்படும்.

Related Stories: