கம்பம் அருகே நள்ளிரவு பரபரப்பு: 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணதேவன்பட்டி நேசன் தொடக்கப்பள்ளி தெருவில் நேற்று முன்தினம்  நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. பலத்த வெடிகுண்டு சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்த பொதுமக்கள் தெருக்களில் ஓடிச்சென்று பார்த்தபோது தெருவில் யாருமில்லை. வெடிகுண்டுகள் வெடித்தபோது நிலநடுக்கம் ஏற்படுவது போன்ற அதிர்வலைகள் உண்டாகி வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. பாத்திரங்கள் உருண்டோடின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ராயப்பன்பட்டி போலீசார், குண்டு வெடித்த தெருவில் உள்ள 6 இடங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கல் குவாரிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது யார், எதற்காக வீசினார்கள், ஏதேனும் சதித்திட்டத்திற்கு மர்ம கும்பல் திட்டமிட்டுள்ளதாக என்பது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: