கம்பம் வேலப்பர்கோவில் தெருவில் நடுரோட்டில் வாகனங்கள் பார்க்கிங்-கடும் போக்குவரத்து நெரிசல்

கம்பம் : கம்பத்தில் சாலையில் வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். கம்பத்தின் இதய பகுதியான சிக்னல், அரசமரம், வேலப்பர் கோவில் தெருவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். வேலப்பர் கோவில் தெருவில் மருத்துவமனைகள், நகைக்கடைகள், பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இதனால் இப்பகுதியில்  பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். ஆனால் இப்பகுதியில் காலை நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சரக்கு லாரியை நடு ரோட்டில் நிறுத்தி சரக்கு இறக்குவதால், பின்னால் வானக ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

 மேலும் வேலப்பர் கோவில் தெருவில் உள்ள ரோட்டை பாதிக்கு மேல் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மிச்சம் இருக்கக்கூடிய ரோடுகளில் சரக்கு வாகனமும், ஆட்டோக்களும் வழி மறித்து நடு ரோட்டில் நிற்கின்றன. இதனால் அவசர வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: