தேங்கியுள்ள குட்டை நீரால் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம்-ஆக்கிரமிப்பால் தொடரும் அவலம்

தியாகதுருகம் : தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் சந்தை மேடு பகுதியில் தேங்கியுள்ள குட்டை நீரால்  தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தியாகதுருகம்  3வது வார்டு பேருந்து நிலையம் பின்புறம் சந்தை மேடு பகுதியில் சுமார்  ஒரு வருடமாக மழைநீர் குட்டையாக தேங்கியுள்ளது. இப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சிறுவர்கள்  முதியவர்கள் என இந்த வழியாகத்தான் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

 தியாகதுருகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று வார சந்தை   நடைபெற்று வருகிறது. காய்கறிகளை வாங்க சந்தைக்கு வரும் பொதுமக்கள் பாசி  படர்ந்த அந்த குட்டை வழியாகச் செல்லும்போது துர்நாற்றம் வீசுவதுடன்  சிறுவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து  அப்பகுதி மக்கள் கூறுகையில், மழை காலங்களில் மழை பெய்யும் போது தேங்கி  நிற்கும் நீர் வெளியே செல்ல ஏதுவாக ஓடை கால்வாய் இருந்தது.

அதனை சிலர்  ஆக்கிரமித்து ஓடை கால்வாயை  அடைத்து விட்டனர். இதனால் மழைக்காலங்களில்  தேங்கும் நீர் வெளியே செல்லாமல் குட்டை போல் தேங்கி உள்ளது. ஆகவே முறையாக இந்த குட்டை நீர் வெளியே செல்ல உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: