அழகியபாண்டியபுரத்தில் காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் வத்தல் மழையில் நனைந்து வீணானது-விவசாயிகள் வேதனை

நெல்லை : மானூர் அருகே அழகியபாண்டியபுரத்தில் காய வைத்திருந்த மிளகாய் வத்தல், மழையில் நனைந்து வீணானது. இதனால் போதிய விலை கிடைக்காது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், அழகியபாண்டியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் வத்தல்களை விவசாயிகள், திறந்தவெளி பரப்பில் காய வைத்திருந்தனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென பெய்த மழையில், காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் வத்தல்கள் அனைத்தும் நனைந்து வீணானது. இதனால் வத்தலுக்கு போதிய விலை கிடைக்காது என்பதால் அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.

இதுகுறித்து அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த விவசாயி மாடசாமி கூறுகையில், ‘‘2 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்த மிளகாயைப் பறித்து வத்தலுக்காக காய வைத்திருந்தோம். சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் நனைந்ததால் அதிகளவு வத்தல் வீணாகிவிட்டது. விதை, உரம், பூச்சிமருந்து, வேலையாள்கூலி உள்பட இதுவரை லட்சக்கணக்கில் செலவாகி உள்ளது. 100 கிலோ எடையுள்ள ஒரு குவிண்டால் மிளகாய் வத்தலை இதுவரை 10 முதல் 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

ஒரு கிலோவுக்கு 100 முதல் 120 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைத்துவந்த நிலையில், தற்போது மழையில் நனைந்து வீணாகிய வத்தலை குறைவான விலைக்கே வியாபாரிகள் கேட்கின்றனர்.

இதனால் லட்சக்கணக்கில் செலவளித்து, கஷ்டப்பட்டு விவசாயம் செய்த எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காது’’ என்றார்.

Related Stories: