மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்குவதா? ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்குவதா என்று ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு மிர்பாஹீ என்பவரால் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக தொடர்ந்து இருந்தது. பாபர் மசூதி தாழ்வாரத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறி இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாட முயற்சி செய்தன.

இதையொட்டி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. நீதிமன்ற வழக்குகள் என ஆரம்பித்து பாஜ அங்கே ராமர் கோவில் கட்டுவதை தனது அரசியல் நோக்கமாக பிரகடனம் செய்தது. அதற்காக கரசேவை என்ற போர்வையில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது கிரிமினல் குற்றம் என்றும், அதேநேரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து மோடி ஆட்சியில் அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான வழங்கியுள்ள பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருக்கிறது. இது வரலாற்றுச் சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கும் செயலாகும். இப்படி நீக்குவதன் மூலமாக வரலாற்றில் இருந்து பாபர் மசூதியை நீக்கிவிடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருதுகிறது. இந்த திரிபுவாதங்களை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்குவதா? ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: