குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு கரடி, சிங்கவால் குரங்கு கொண்டு வர நடவடிக்கை: மான்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு கரடி, சிங்கவால் குரங்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஏப்ரல் 20ம் தேதி சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில்  வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிக்காட்டு நெறிமுறைகள் பின்பற்றி குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதில், முகக்கவசம் அணிந்து வந்தவர்கள்  மட்டுமே பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, அங்குள்ள தொட்டியில் கிருசிநாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் கால்களை நனைத்து விட்டு உள்ள செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பூங்காவில், புள்ளிமான், கடமான், மயில்கள், மலைபாம்பு, நரி, உடும்பு, கிளிகள் உள்ளிட்டவைகளை ரசித்து பார்த்து செல்கின்றனர். இதனிடையே, பூங்காவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை மேம்படுத்தும் வகையில், புலி, சிறுத்தை, கரடி, நரி, சிங்கவால் குரங்கு மற்றும் வெளி நாட்டு பறவைகள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கும்,’’ என்றனர்.

Related Stories: