நல வாரியங்களில் இருந்து நீக்கப்பட்ட 12 லட்சம் பேர் பதிவை புதுப்பித்து நிவாரணம் கோரி வழக்கு

மதுரை: நலவாரியங்களில் இருந்து நீக்கப்பட்ட 12 லட்சம் பேரின் பதிவை புதுப்பித்து, கொரோனா நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில், அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. பதிவை புதுப்பிக்காமல் இருந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான ஒரு வழக்கில், பதிவைப் புதுப்பிக்கவும், அதன்பின் நிவாரணம் வழங்குவது குறித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட நலவாரியங்களைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் தொழிலாளர்களின் பதிவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஐகோர்ட் உத்தரவுப்படி பதிவை புதுப்பிக்கவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மனுவிற்கு தொழிலாளர் நல அமைச்சக கூடுதல் தலைமை செயலர், தொழிலாளர் கமிஷனர் நலவாரிய செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: