தெற்கு வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாகிறது: தென் மாவட்டங்களில் மிக கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறுகிறது. இதையடுத்து தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக தற்போது வங்கக் கடலில் அடுத்தடுத்த புயல்கள் தமிழகத்தில் அதிக மழையை கொடுத்து வருகிறது. நிவர் புயல் கரையை கடந்து தற்போது 4 நாட்கள் மட்டுமே கடந்த நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அந்தமானுக்கு தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று நேற்று காலை வரை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காரைக்காலுக்கு தென் கிழக்குப் பகுதியில் 975 கிமீ தூரத்தில் வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக வேலூரில் 30மிமீ மழை பெய்தது. இந்நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகரத் தொடங்கியது. நேற்று இரவு அதுமேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியநிலையில் இன்று புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். புயலாக மாறிய பின்னர் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களை நாளை நெருங்கி வரும் போது, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இடியுடன் அதிக கனமழை பெய்யும். இதுதவிர புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். வட மாவட்டங்களை பொறுத்தவரையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஓரிரு இடங்களில் பெய்யும்.

வங்கக் கடலில் புயல் சின்னம் நிலை கொண்டு இருப்பதால், தென்மேற்கு வங்கக் கடல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். 2ம் தேதியும் மேற்கண்ட பகுதிகளில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தென் கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் நிலை கொண்டு இருப்பதை அடுத்து தமிழக  துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.

Related Stories: