பள்ளி மாணவ, மாணவியருக்கு போதை விழிப்புணர்வு பேரணி

பெரம்பூர், ஜூன் 23: தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் அவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எம்கேபி நகர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட எம்கேபி நகர் காவல் நிலையம் மற்றும் கொடுங்கையூர் காவல் நிலையம், வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் இணைந்து நேற்று எம்கேபி நகரில் உள்ள விவேகானந்தா பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர்.

இதில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை சைக்கிளில் ஏந்தியபடி போலீசாருடன் இணைந்து பள்ளி மாணவர்களும் ஊர்வலமாக சென்றனர். எம்கேபி நகர் காவல் நிலையம் அருகே தொடங்கிய சைக்கிள் பேரணி மீனாம்பாள் சாலை, எம்ஆர் நகர் சந்திப்பு, எருக்கஞ்சேரி வழியாக மீண்டும் எம்கேபி நகர் காவல் நிலையம் அருகே வந்து முடிந்தது. இதில் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், வியாசர்பாடி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மனோகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் என மூன்று காவல் நிலையங்களும் சேர்ந்து பள்ளி மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் குக்ஸ் ரோடு அரசு பள்ளி மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் இணைந்து சுமார் 150 மாணவ, மாணவிகளோடு போலீசாரும் பேரணியில் பங்கேற்றனர். ஓட்டேரி நியூ பேரன்ஸ் ரோடு, அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிம்லர்ஸ் ரோடு வழியாக பேரணி சென்றது. இதில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ஆபிரகாம் குரூஸ், சிவகுமார் மற்றும் புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதே வேளையில் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post பள்ளி மாணவ, மாணவியருக்கு போதை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: