ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது கார் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சென்னை கல்லூரி மாணவி பரிதாப பலி: 3 மாணவர்கள் படுகாயம்

 

சென்னை, ஜூன் 24: ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது, வேலூர் அருகே சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேர் சென்ற கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் ஒரு மாணவி இறந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர் டிராவிட் (21), நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (19), ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் சக்தி (21), அஸ்வதி (21). நண்பர்களான இவர்கள் 4 பேரும் சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று மாணவர்கள் டிராவிட், விஷ்ணு, மாணவிகள் சக்தி, அஸ்வதி ஆகிய 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை காரில் புறப்பட்டனர். காலை 9.15 மணியளவில் கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் விமான நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனை இடித்து தள்ளிக்கொண்டு எதிர்திசையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மாணவி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது கார் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சென்னை கல்லூரி மாணவி பரிதாப பலி: 3 மாணவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: