மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆலந்தூர் மண்டலக்குழு கூட்டத்தில் கோரிக்கை

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டல குழு கூட்டம், தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், செயற்பொறியாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:
துர்காதேவி நடராஜன்: மழைக்காலங்களில் மரங்களை வெட்டுவதற்கு மிஷின் வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன்: எனது வார்டில் தற்போது பெய்து வரும் சிறு மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயில் தெரு, உசேன் சுபேதார் தெரு போன்றவற்றில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது.
பூங்கொடி ஜெகதீஸ்வரன்: தெரு நாய்களை பிடிப்பது போல பூனைகளையும் பிடிக்க வேண்டும்.
தேவி ஏசு தாய்: பழவந்தாங்கல் நியூ காலனியில் உள்ள சமுதாய கூடம் மூடியே கிடக்கிறது. இதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் சரிவர குப்பைகளை அகற்றுவதில்லை.
உஷாராணி பாண்டியன்: மணப்பாக்கம எம்.ஜி சாலை மற்றும் மணப்பாக்கம் பகுதி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட காரிய மண்டபம், பல்நோக்கு கட்டிடம் போன்றவற்றை திறக்க வேண்டும்.
பாரதி குமரா: நந்தம்பாக்கத்தில் உள்ள விளையாட்டு பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும். கன்டோன்மென்ட் போர்டு குப்பை எங்கள் பகுதியில் எரிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியோர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.
செல்வேந்திரன்: மின்வாரிய ஊழியர்கள் வெட்டிய மரக்கிளைகளை சாலையில் போட்டு எடுக்காமல் சென்று விடுகின்றனர். மணப்பாக்கம், முகலிவாக்கம் சாலைகளில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும்.
சாலமோன்: மாரீசன் 5வது தெரு, நோபுள் தெரு, கண்ணன் காலனி 4வது தெரு போன்றவற்றின் மழைநீர் கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும். மழைநீர் செல்ல சிறு பாலங்களை உயர்த்தி தர வேண்டும்.
அமுதபிரியா செல்வம்: மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் வைக்கப்பட்ட அழகிய பூஞ்செடிகள் உடைந்து காணப்படுகிறது. அதனை சீரமைத்து தர வேண்டும். கவுன்சிலர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து மண்டலக் குழு தலைவர் என்.சந்திரன் பேசுகையில், கவுன்சிலர்கள் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்றார். தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆலந்தூர் மண்டலக்குழு கூட்டத்தில் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: