வழித்தட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

 

சென்னை, ஜூன் 24: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு 54 கிலோ மீட்டர் தூரத்தை 600 டிரிப்கள் மூலம் சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 46 ரயில்களும், கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் 36 ரயில்களும் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயிலில் புதிதாக பயணிக்கும் பொதுமக்ளுக்கு, வழித்தட விவரம் மற்றும் அடுத்த நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை வழங்குவதற்காக டைனமிக் ரூட் மேப் என்ற புதிய சிஸ்டம் ஒன்றை சென்னை மெட்ரோ ரயிலில் பொருத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் எல்இடி பேக் லைட் மற்றும் எல்சிடி அடிப்படையிலான டைனமிக் ரூட் மேப் டிஸ்ப்ளேக்களை சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில்களில் பொருத்த திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளன. இந்த மேப்பில் குறிப்பிட்ட ரயில் எந்த வழித்தடத்தில் பயணம் செய்கிறது. தற்போது எந்த நிறுத்தத்தில் ரயில் இருக்கிறது.

அடுத்து எந்த ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிற்கும், ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் அருகில் உள்ள பகுதிகள் என்ன குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், எங்கு இறங்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும்.  இதுதவிர இந்த மேப்பில் ரயில் என்ன வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அடுத்த ரயில் நிலையத்திற்கு எத்தனை மணிக்கு சென்று சேரும், ரயிலுக்குள் இருக்கும் வெப்ப நிலை, எவ்வளவு வெளியே இருக்கும்.

வெப்ப நிலை எவ்வளவு உள்ளிட்ட தகவல்களும் இடம்பெறும். இந்த மேப்புகளை 2 கட்டங்களாக ரயில்களில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரோட்டோ டைப் அடுத்த 6 மாதத்திற்குள் ரெடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூட் மேப்பில் என்னென்ன தகவல்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் பயணிகளிடம் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த வசதிகளை செய்து கொடுக்க தயாராகி உள்ளது. இதற்கான பணிகள் எல்லாம் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

இதன் புரோட்டோ டைப் தயாராகி, அது அனுமதி பெறப்படும் நிலையில், இந்த டைனமிக் ரூட் மேப் சென்னை மெட்ரோ ரயில் பொருத்தப்படும். சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்தாலும், பல்வேறு மாநிலங்கள் அல்லது தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் முதலில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை பெறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த ரூட் மேப் வழங்குவது நிச்சயம் வரவேற்கத்தக்கது, என மெட்ரோ பயணிகள் தெரிவித்துள்ளனர்.

The post வழித்தட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: