யானைகவுனி மேம்பாலத்தில் மற்றொரு வழித்தட பணி 96% நிறைவு: அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 57வது வார்டில் உள்ள யானைக்கவுனி மேம்பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தின் மேல் அமைந்துள்ளது. கடந்த 1933ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் பழுதடைந்ததால், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, கடந்த 2016ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த மேம்பாலத்தை இடித்துவிட்டு, புதிய மேம்பாலம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதனை தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு யானைகவுனி மேம்பாலம் இடிக்கப்பட்டு, புதிய மேம்பால பணி தொடங்கப்பட்டது.

இந்த பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி ரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த பகுதியை இடித்துவிட்டு 156.12 மீ. அளவிற்கு ரயில்வே துறையின் மூலம் மேம்பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ. அளவிற்கு சாய்தள சாலை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ. மற்றும் ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ. நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சி சார்பில், மூலதன நிதியின் கீழ், ரூ.30.78 கோடி மதிப்பிலும், ரயில்வே துறையின் மூலம் ரூ.40.48 கோடி மதிப்பிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் மந்தகதியில் நடைபெற்றது.

கடந்த 2019 முதல் 20 முறை ரயில்வே பொது மேலாளர், ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து, இந்த மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்திலும், இது குறித்து பலமுறை குரல் எழுப்பினார். அதை தொடர்ந்து, வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒழிவழிப்பாதை பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனால், புரசைவாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். மற்றொரு வழித்தடத்தில் மாநகராட்சிக்கு உட்பட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில்வே துறை பணிகளும் 96% முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இந்த மாதம் இறுதியில் முடிக்கப்பட உள்ளது. இதன் பின்னர், இந்த பாலத்தில் கனரக வாகன சோதனை ஒட்டம் நடைப்பெற்று அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் வட சென்னை மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பு நிறைவு பெறும்.

The post யானைகவுனி மேம்பாலத்தில் மற்றொரு வழித்தட பணி 96% நிறைவு: அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: