(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் புதன் அமர்ந்திருக்கிறார்கள். லாபஸ்தானம் என்பது தொழில் லாபத்தை மட்டும் குறிப்பதல்ல. சிந்தனை லாபத்தையும் குறிப்பது. எனவே நல்ல எண்ணங்கள் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். அந்த மூன்று கிரகங்களும் உங்கள் பூர்வ புண்ணிய ராசியைப் பார்ப்பதால் பூர்வ புண்ணிய பலன் அதிகரிக்கும். அதோடு குரு ஏழாம் பார்வையாக ராசியைப் பார்ப்பதால் ராசி புண்ணியம் பெறுகிறது. தேவைக்கேற்ற பொருளாதாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும். தடைபட்ட காரியங்கள் எப்படியாவது ஒரு விதத்தில் சுபமாக முடிந்துவிடும். ராசிநாதன் சனி, வக்ர நிவர்த்தி பெறுவதும் நன்மை செய்யும்.
கவனம் தேவை: ஏழாம் இடத்தில் உள்ள குரு வக்ரம் பெறுவதால் திடீர் தடைகள், மன சஞ்சலங்கள், குழப்பங்கள் ஏற்படலாம். சிறிய அளவில் பணத்தட்டுப்பாடு வரலாம். அது கவனக்குறைவால் வருவது என்பதால் ஜாக்கிரதையாக இருந்தால் நிலைமையைத் தவிர்க்கலாம். ராசிக்கு 12 ல் செவ்வாய் வருவதால் சகோதர உறவுகளால் செலவுகளும் மனக்கசப்பும் ஏற்படலாம்.
சந்திராஷ்டமம்: 10.12.2025 அதிகாலை 2.24 முதல் 12.12.2025 காலை 10.20 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சிவன் கோயிலில் நவகிரக சந்நதிக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். நன்மை கிடைக்கும்.
