கன்னி

(11.6.2026 முதல் 17.6.2026 வரை)

சாதகங்கள்: பாக்கியஸ்தானத்தில் சூரியன், லாபஸ்தானத்தில் குரு சுக்கிரன், ஆறாம் இடத்தில் ராகு என முக்கியமான கிரகங்கள் உங்களுக்கு நன்மை செய்ய காத்திருக்கும் வாரம் இது. திடீர் பணவரவு உண்டு. வராது என்று நினைத்த எதிர்பாராத கடன்கள் வசூலாகும். தடைப்பட்டிருந்த காரியங்கள் கைகூடும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. சகோதர ஒற்றுமை சாதகமாக இருக்கும். அரசாங்க அலுவல்கள் சிக்கலின்றி முடியும். தந்தையின் அன்பும் ஆதரவும் உண்டு. வியாபாரத்தில் தொய்வு அகன்று வியாபாரம் சூடுபிடிக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுவிடுவீர்கள். மேலதிகாரிகள் ஆதரவுக்கரம் நீட்டுவர். கலைத்துறையினருக்கு நல்வாய்ப்புகள் உண்டு.

கவனம் தேவை: ஏழில் சனி, எட்டில் செவ்வாய் என்பதை மறந்துவிட வேண்டாம். 12ல் இருக்கும் கேது இணைந்து, எதிர்பாராத மருத்துவச் செலவுகளைத் தரலாம். சிறு காயங்கள் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரிடலாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும். களத்திரஸ்தானத்தில் சனி இருப்பதால், குடும்பத்தில் கருத்து உரசல்கள் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 11.6.2026 காலை 8.16 முதல் 13.6.2026 காலை 9.25 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை நீங்கள் தியானம் செய்யுங்கள். நன்மை நடக்கும்.