கோவையில் 2 மாடி கட்டிடம் இடிந்தது இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலி: 5 பேர் காயத்துடன் தப்பினர்

கோவை: கோவை செல்வபுரம் அருகே செட்டி வீதி கேசி தோட்டத்தை சேர்ந்தவர் வனஜா (65). இவரது கணவன் இறந்துவிட்டார். மகன் கண்ணன் (35), மகள் கவிதா (40) சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர். 40 ஆண்டுகளுக்கு முன் தந்தை கட்டிய இரண்டு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் மனைவி சுவேதா (28), மகன் தன்வீர் (5) மற்றும் தாய், சகோதரியுடன் கண்ணன் வசித்துள்ளார். மேல் தளத்தில் இருந்த வீட்டில் சரோஜினி (70), இவரது மகன் மனோஜ் (47) ஆகியோர் வாடகைக்கு வசித்துள்ளனர். கண்ணன் வீட்டை ஒட்டியிருந்த மற்றொரு ஓட்டு வீட்டில் கோபால்சாமி (70), இவரது மனைவி கஸ்தூரி (65), மகன் மணிகண்டன் (35) ஆகியோர் வசித்துள்ளனர்.

கண்ணனின் இரண்டு மாடி கட்டிடம் பழமையானது என்பதால் எப்போது இடியும் என்ற நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்தது. பக்கத்து வீடும் இடிந்தது. இடிபாடுகளில் சிக்கியிருந்த வனஜா, கவிதா, மணிகண்டன் ஆகியோர் ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டனர். சிறுவன் தன்வீர் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது இடிபாட்டிற்குள் சிக்கியிருப்பதாக தெரிவித்தான். அவர்கள் டார்ச் அடித்து காட்டிய இடத்தின் வழியாக லாவகமாக புகுந்து வெளியே வந்து விட்டான். கண்ணன் வெளியே நின்று கொண்டிருந்ததால் தப்பினார். தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி சுவேதா, கோபால்சாமி அவரது மனைவி கஸ்தூரி சடலங்களை மீட்டனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் நேற்று இரவு இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

Related Stories: